படையினர் வசம் இருந்த மேலும் 23.5 ஏக்கர் காணி விடுவிப்பு

ஆகஸ்ட் 18, 2019

கிளிநொச்சி கிறிஷ்ணபுரத்தில் படையினர் கட்டுப்பாட்டில் இருந்த 23.5 ஏக்கர் அரச அனுமதிபெற்ற கட்டிடங்களை உள்ளடக்கிய காணியானது, நல்லெண்ண மற்றும் நல்லிணக்க நோக்கத்துடன் படையினரால் கடந்த வியாழன் 15 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

மேலும், நாட்டின் சமாதானத்திற்காக இடம்பெற்ற யுத்தத்தின் போது படையினர் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த கட்டிடங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகள் தொடர்பான ஆவணங்கள் மாவட்ட செயலாளர் திரு. எஸ்.அருணநாயகம் அவர்களிடம், கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெணரல் விஜித ரவிப்பிரிய அவர்களினால் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த குறித்த காணி விடுவிப்பு செயற்பாடானது, அரச கொள்கையான தனியார் மற்றும் அரச காணிகளை துரிதமாக வடுவிக்கும் திட்டத்தின் ஒரு அம்சமாக காணப்படுகின்றது.

மேலும், படையினரால் இதுவரையில் 27,375.5 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மற்றும் பல காணி உரிமையார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: army.lk