--> -->

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்களை விரைவாக அழிக்க திட்டம் - பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 25, 2022
  • கணிசமான அளவு ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு மீன்பிடி படகுகள் சகிதம் 11 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது 
  • கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் சந்தைப் பெறுமதி 3300 மில்லியன் ரூபா என கணிப்பு
  • இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு மீனவர்கள் இரையாகக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு


கைப்பற்றப்படும் சட்டவிரோத போதைப் பொருட்களில் விசாரணைக்கான ஒரு தொகையை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவைகளை மஜிஸ்திரேட் முன்னிலையில் உடனடியாகை அழிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறுசீரமைக்கப்பட்டு வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி,25) தெரிவித்தார்.

இது தொடர்பான சட்ட மறுசீரமைப்பு மற்றும் சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டபோது அவற்றைப் பார்வையிட சென்ற வேளையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, மீன்பிடிக்கும் பாணியில் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்று மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்த பாதுகாப்புச் செயலாளர் அவ்வாறனவர்கள் சட்டத்திற்கு முன்கொண்டுச் செல்லப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் கடற்படை இரு வாரங்களாக மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் பிரதிபலனாக சுமார் 350 கிலோ எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் 11 உள்ளுர் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவது போன்று இரு மீன்பிடி படகுகளில் சென்றுள்ளனர். இவற்றில் ஒரு படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மேற்படி போதைப் பொருளை ஆழ்கடலில வைத்து தமது மீன்பிடி படகிற்கு மாற்றியுள்ளதுடன் மற்றைய படகு அவற்றை கொண்டுவர சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட அவர், "போதைப்பொருள் பிரபுக்களால் கட்டுப்படுத்தப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கும்பலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது " என தெரிவித்ததுடன், "நாங்கள் எதிர்காலத்திலும் இதேபோன்ற நடவடிக்கைகளைத் தொடருவோம்" என கூறினார்.

"சட்ட அமலாக்க முகமைகளின் ஆதரவுடன் கடல் வழிகள் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்க நாங்கள் பாடுபடுகிறோம்" என்று உறுதியளித்தார், இது கிட்டத்தட்ட 350 கிலோ போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுடன் பொலிஸ் போதை தடுப்பு பணியகத்திடம் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

போதைப்பொருள் அற்ற நாட்டைக் காண்பதற்காக கடற்படைத் தளபதி, சம்பந்தப்பட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், சமுதுர கடற்படை கப்பலின் குழுவினர்,பொலிஸ் போதை தடுப்பு பணியக அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வுச் சேவைகளின் குழுவினர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதற்காக அவர் பாராட்டினார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்களின் சந்தை பெறுமதி சுமால் 3300 மில்லியன் ரூபாவுக்கு அதிகமென நம்ம படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.