பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
ஆகஸ்ட் 18, 2019பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கான நலனோன்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் திருமணமாகாத படையினருக்காக மருதானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (16) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சகல அரச அதிகாரிகளும் தமது அலுவலக கடமைகளில் மாத்திரமன்றி தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு தேவையான வசதிகளையும் வழங்குவதனூடாக உயர்ந்தபட்ச, வினைத்திறனான சேவையை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் மட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பல நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவர்களது பதவியுயர்வு, கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்காக பெருமளவிலானோர் தகுதி பெற்றுள்ளமையினால் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு சிரமமாக இருந்தபோதிலும் மூன்று பிரிவுகளின் கீழ் அப்பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
10 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் தொகுதி 1,174 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதுடன், சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் தொகுதிக்கான மொத்தச் செலவு 350 மில்லியன் ரூபாவாகும்.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வீடமைப்புத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டார்.
மேலும் திருமணமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நலனோன்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கரையோர பொலிஸ் வீடமைப்புத் தொகுதியையும் இன்று ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
11 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்பு தொகுதி 60 உத்தியோகபூர்வ இல்லங்களைக் கொண்டுள்ளதுடன், அவற்றுள் 18 வீடுகள் பொலிஸ் பரிசோதகர்களுக்கும் ஏனையவை அதற்கு கீழ் மட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் தொகுதியின் மொத்தச் செலவு 407 மில்லியன் ரூபாவாகும்.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வீடமைப்பு தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனைப் பார்வையிட்டதுடன் வீட்டினைப் பெற்றுக்கொண்ட பயனாளி ஒருவருக்கு வீட்டுச் சாவியையும் கையளித்தார்.
இந்நிகழ்வினை அடையாளப்படுத்தும் வகையில் வீடமைப்புத் தொகுதி வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி அவர்கள் நாட்டினார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பதில்கடமை பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி: pmdnews.lk