துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பெப்ரவரி 02, 2022இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கேன் கோக்சென் கொக்காயா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 02) சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர,கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த துருக்கி பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன் அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே நிலவும் சுமுகமான மற்றும் பரஸ்பர உறவுகள் நினைவு கூறப்பட்டதுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டன. மேலும் இராணுவ மாணவர் பரிமாற்ற திட்டங்களுக்கான முன்முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்தியாவில் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைக் கொண்டுள்ள துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டே இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கமைய நடைபெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.