அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சார மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு

பெப்ரவரி 03, 2022

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரைச் சேர்ந்த அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு 50 மின்சார மோட்டார் வண்டிகள் கையளிக்கப்பட்டன.

 ஸ்ரீ ஜயவர்தனபுர,கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (பெப்ரவரி, 03) இடம்பெற்ற வைபவத்தின் போது இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவின் (ஓய்வு) அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அங்கவீனமுற்ற 12 படை வீரர்களுக்கான மின்சார மோட்டார் சைக்கிள்களை வைபவ ரீதியாக கையளித்தார்.

படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரணவிரு சேவா அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சார மோட்டார் சைக்கிள்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், படை வீரர்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், படை வீரர்களின் நலனுக்காக அரசாங்கம் சம்பள சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் தனது வேலைப்பலுவுக்கு மத்தியிலும் ஒவ்வொரு பயனாளியையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் உடல்நலம் மற்றும் நலன்களைப் பற்றியும் விசாரித்தார். ஒரு சிரேஷ்ட இராணுவ வீரரான பாதுகாப்புச் செயலாளர், போர்க்கால அனுபவங்களை போர் வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுவதன் மூலம் அங்கவீனமுற்ற படை வீரர்கள் நடமாடுவதில் உள்ள சிரமத்தை குறைப்பதற்கு ஏதுவாக அமைவதுடன் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பததில் உள்ள சிரமத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இந்த படை வீரர்களை முன்னோக்கி நகர்த்துவதற்கும், தொழில்முயற்சியாளர்களாக மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய வரலாற்றில் முதன்முறையாக ரணவிரு சேவா அதிகாரசபையினால் போர்வீரர்களின் நலனுக்காக இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கண்டி, குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் சுதந்திர தின வாரத்தை முன்னிட்டு ரனவிரு சேவா அதிகாரசபையின் தலைவரின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை விநியோகிக்க ரணவிரு சேவா அதிகார சபை உத்தேசித்துள்ளது.

இந்நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் உப தலைவி திருமதி சோனியா கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.