மன்னாரில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

பெப்ரவரி 05, 2022

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை கைப்பற்றினர்.

நேற்றைய தினம் (பெப்ரவரி 04) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் 08 மில்லியன் ரூபா பெருமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள கஜபா கடற்படை கப்பலை சேர்ந்த கடற்படை வீரர்கள் குழுவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் பேசாலை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 தொடக்கம் 31 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.