பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பெப்ரவரி 11, 2022

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்க்கி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 11) சந்தித்தார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பாகிஸ்தான் புதிய உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன் அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் பாதுகாப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்போது பாதுகாப்பு செயலாளர், புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேஜர் ஜெனரல் புர்கி, 2022 பெப்ரவரி 1ம் திகதி கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து தனது உத்தியோக பூர்வ பத்திரத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

தங்களது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளரும் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டதுடன், நல்லெண்ணத்தின் அடையாளமாக பாதுகாப்புச் செயளாலரினால் இலங்கை இராணுவ வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட சில புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் சப்தர் கான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.