கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் துருக்கி எயார்கிராஃப்ட் நிறுவனத்துடன் ஒன்றினைவு
பெப்ரவரி 14, 2022ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், துருக்கிய எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷனுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, விமான பொறியியல் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் அதிமேதகு மொஹமட் ரிஸ்வி ஹசனின் பங்கேற்புடன், ஆரம்ப கட்ட முறையான இணையவழி கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி, 14) இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தனது துருக்கி விஜயத்தின் போது விடுத்த வேண்டுகோளிற்கிணங்க கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் துருக்கிய எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷனுடன் இணைந்து துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இந்த இணையவழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
துருக்கி எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷனானது, அந்நாட்டின் வடிவமைப்பு, மேம்பாடு, நவீனமயமாக்கல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த விண்வெளி முறைமைகளுக்கான பிரதான ஒத்துழைப்பு, நிலையான மற்றும் ரோட்டரி விங் விமான தளங்கள் முதல் ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் வரையிலான தொழில்நுட்ப மையமாகும்.
இந்த நிறுவனம், விமான கட்டமைப்பு, விமானம், ஹெலிகொப்டர், ஆளில்லா விமான முறைமை மற்றும் திட்டங்கள் மற்றும் தளவாட தீர்வுகள் ஆகிய பகுதிகளில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
இலங்கைக்குழு சார்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அதேவேளை, எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷனின் கல்வித்துறை தலைவர் பேராசிரியர் அஹ்மத் பினர்பாசி துருக்கி சார்பில் தலைமை வகித்தார்.
இந்த கலந்துறையாடலில் ஆசிய பிராந்தியத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் இஸ்ஸெட் அஸ்லான், கல்வித்துறை பொறுப்பாளர் எம்ரே யில்மாஸ், பொறியியல் கல்வித் தலைவர் செர்ஹத் குல், தொழிற்கல்விக்கான பிரதானி பெரட் எம்ரே இலேரி மற்றும் தொழிற்கல்வி நிபுணர் ஹுமேரா யோல்கு ஆகியோர் துருக்கிய எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷன் சார்பாக கலந்து கொண்டனர்.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பீடத்தின் பீடாதிபதி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி, சர்வதேச உறவுகள் அலுவலகத்தின் பணிப்பாளர், விமான பொறியியல் திணைக்களத்தின் தலைவர் மற்றும் விமான பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆகியோர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.