குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு விமானப்படையினரால் குறைந்த செலவில் நெல் அறுவடைத் திட்டம்

பெப்ரவரி 15, 2022

இலங்கை விமானப்படை, குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அறுவடைச் செலவைக் குறைக்கும் நெல் அறுவடைத் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது.

மொறவெவ விமானப்படை நிலைய கட்டளை அதிகாரி குரூப் கப்டன் லலித் சுகததாசவின் மேற்பார்வையின் கீழ் நெல் அறுவடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் ஊடாக மொறவெவ பிரதேச செயலகம் மற்றும் பிராந்திய நெல் விவசாய சங்கங்களின் பரிந்துரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 31 விவசாய குடும்பங்கள் பயனடையவுள்ளன.

இதற்கமைய முதற்கட்டமாக 93 ஏக்கரில் நெல் அறுவடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
 இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டங்கள் முறையே கனுகஹவெவ மற்றும் அம்பாறை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.