நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு

பெப்ரவரி 16, 2022

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சியானது கடற்படை வீரர்களின் தொழில்முறை மற்றும் அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
 
இந்தப் பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான தலைமையில் இலங்கை கடற்படையின் கஜபாஹு கப்பலில் இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்புக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

செயற்பாடு நிலையம், கடலில் நிரப்புகை (RAS), தந்ரோபாய பயிற்சிகள், விஜயம் மேற்கொள்ளல், தரித்திருத்தல், தேடல் மற்றும் கைப்பற்றுதல் , மேற்பரப்பு மற்றும் வான் இலக்குகளை பகல் மற்றும் இரவு வேளைகளில் குறிவைத்து தாக்குதல், தகவல் தொடர்பாடல் என்பன இந்த கடற்படை பயிற்சியின் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.

கொழும்பு கடற்படை பயிற்சி இறுதி நாள் நிகழ்வுகள் கடற்படையின் பிரதி பிரதம அதிகாரியும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவினால் பரிசீலனை செய்யப்பட்டது. இதன்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ள கடற்படைப் பிரிவுகளினால் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்ட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கொழும்பு கடற்படை பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனுப்பப்பட்டது. இதற்கமைய, விமான மற்றும் கடற்படை ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு தயார்நிலையை வெளிப்படுத்தும் வகையில் பல பயிற்சிகள் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகளுக்கு இணங்க இந்த பயிற்சி நடவடிக்கைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.