சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” நிகழ்வு

பெப்ரவரி 20, 2022

இலங்கை விமானப்படையால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2022” ஓட்ட நிகழ்வு இன்று ( பெப்ரவரி, 20) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 “டே ரன் – 2022” ஓட்ட நிகழ்வில் விமானப்படை தளபதியும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் தலைவருமான எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் விமானப்படை அரிகாரிகளின் பிரதானி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ மற்றும் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
சுமார் 4 கி.மீ. தூரத்தைக் கொண்ட இந்த டே ரன் ஓட்ட நிகழ்வில் ஒவ்வொரு படைச் சேவையிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 133 நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

'விளையாட்டு மூலம் சிநேகம் கொள்வோம்' எனும் மகுட வாசகத்தினை தன்னகத்தே கொண்ட இவ்வமைப்பின் முக்கிய இலக்கு விளையாட்டு மூலம் படை வீரர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் உலக சமாதானத்திற்கு பங்களிப்பதாகும்.