--> -->

ஆசிரியர்கள் சமூகத்தை உருவாக்குபவர்கள் – பாதுகாப்பு செயலாளர்

பெப்ரவரி 20, 2022

தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் பாடசாலை ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பை வழங்குவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

"ஆசிரியர்கள் என்பவர்கள் சமுதாயத்தை உருவாக்குபவர்கள்", "உங்கள் சேவையின் வெளிப்பாட்டினாலேயே சமூகத்தில் ஒழுக்க விழுமியங்கள் நிரப்பப்படுகின்றன" என அவர் தெரிவித்தார்.

மஹரகம ஜனாதிபதி கல்லூரியில் இன்று (20) இடம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜெனரல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணவர், ஆசிரியர் மற்றும் போர்வீரர் நினைவிடம்’ திறப்பு விழாவில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை பாடசாலை மாணவர்கள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

 இதன்போது வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவுகூர்ந்து தேசத்தின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிரதம அதிதிகள் போர் வீரர் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
"இந்த நினைவிடமானது நாட்டின் கொடியை உயரப் பறக்க வைக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போர் வீரர்களின் கூட்டு மற்றும் பங்களிப்பைக் குறிக்கிறது" என்றும் இதற்காக பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உறையாற்றிய அவர்:- நாம் அமைதியான சமுதாயத்தை உருவாக்கி உள்ளோம், பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம், உங்கள் கல்வியை நீங்கள் அனைவரும் எளிதாக தொடர வேண்டும் என தெரிவித்ததுடன் போர்க்காலத்தில் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனைத்து கஷ்டங்களையும் நினைவு கூர்ந்தார்.

தற்போதுள்ள சூழலில் நீங்கள் அனைவரும் இந்த தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும், எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கும் சேவை செய்வீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் அவர் எழுதிய ‘ரோட் டு நந்திக்கடல்’ மற்றும் ‘கோட்டாபய’ ஆகிய சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் கூடிய சில நூல்களையும், ‘காடோல் அத்து’ ‘உத்தர தேவி’ மற்றும் ‘பாதாளையோ’ ஆகிய நூல்களையும் பாடசாலைக்கு வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர், கெப்டன் டபிள்யூ வசந்த குமாரவினால் இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில், பாதுகாப்புச் செயலாளரிடம், போர்வீரர் நினைவுச் சின்னத்தின் உருவகப் பிரதியை பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டது.

மஹரகம ஜனாதிபதி கல்லூரி 1978 பெப்ரவரி 18 இல் கௌரவ பிரேமரத்ன குணசேகரவின் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) முன்மொழிவையடுத்து தேசிய பாடசாலையாக ஸ்தாபிக்கப்பட்டது. பிராந்திய பாடசாலைகளில் உள்ள நெரிசல் நிலைக்கு ஒரு தீர்வாக ஆரம்பத்தில் அரசினர் கலவன் பாடசாலையாகத் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கெப்டன் டபிள்யூ வசந்த குமார, கௌரவ. பிரேமரத்ன குணசேகர, கௌரவ அதிதிகள், இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.