முப்படைகளின் பரஸ்பர சுற்றுப்பயணம் நிறைவு.
ஜூன் 19, 2019இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய இராணுவ முப்படை தூதுக்குழு பிரதிநிதிகள் தமது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று (ஜூன், 18) நாடு திரும்பினர்.
இலங்கை மற்றும் இந்திய படையினருக்கிடையில் பரஸ்பர விஜயத்தின் பிரகாரம் 159 இந்திய முப்படை வீரர்கள் குழுவினர் தமது மனைவிமார் சகிதம் அண்மையில் (ஜூன், 16) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர். அதே தினத்தில் 162 இலங்கை முப்படை வீரர்கள் குழுவினர் தமது மனைவிமார் சகிதம் இந்தியாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாகவும் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மற்றும் இந்திய படையினருக்கிடையில் கூட்டுறவு மற்றும் புரிந்துணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய முப்படை வீரர்கள் குழுவினர் இங்கு பல இடங்களை பார்வையிட்டதுடன், இலங்கையில் முக்கிய இடங்களான வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகை, பின்னவள யானைகள் காப்பகம் மற்றும் தெற்கு கடலோர நகரமான காலி ஆகிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டனர்.
இலங்கை முப்படை வீரர்கள் குழுவினர் இந்தியாவிற்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடுதிரும்பினர்.