இந்திய கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

மார்ச் 01, 2022

இந்திய கடற்படையின் சுழியோடல் ஆதரவுக் கப்பலான "ஐஎன்எஸ் நிரீக்ஷக்" திங்கள்கிழமை (பெப்ரவரி, 28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கொமாண்டர் முகம்மது இக்ராம் கட்டளை வழங்கும் இந்த கப்பலில் 107 இந்திய கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த கப்பலின் கட்டளை அதிகாரி திங்கட்கிழமையன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையகத்தில் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸை சந்தித்து கலந்துறையாடியதாகவும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட்டும் கலந்துகொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படையின் சுழியோடல் ஆதரவுக் கப்பலான "ஐஎன்எஸ் நிரீக்ஷக்" இலங்கை கடற்படையுடன் சுழியோடல் பயிற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இரு கடற்படைகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படை குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

வருகை தந்துள்ள இந்திய கடற்படைக் கப்பல் எதிர்வரும் 08ஆம் திகதி (மார்ச்) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதுடன், இந்த விஜயம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கொவிட்-19 பரவலை தடுக்கும் வழிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.