ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான இரண்டாவது குழு லெபனான் பயணம்

மார்ச் 01, 2022

லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் இரண்டாவது குழு லெபனான் நோக்கி பயணமானது. இதற்கமைய, இலங்கை இராணுவத்தின் 2 அதிகாரிகள் மற்றும் 48 படைவீரர்கள் அடங்கிய 13 ஆவது பாதுகாப்பு குழு அமைதி காக்கும் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (27) லெபனானுக்கு புறப்பட்டது.

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகமான நகோரா, லெபனான் மற்றும் விஷேட பிரமுகர்களின் தேவைக்கேற்ப பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை படையினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கை இராணுவத்தின் 13 வது பாதுகாப்பு குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 115 படைவீர்களும் முதல் முறையாக ஒரு பெண் அதிகாரி உட்பட 7 பெண் படை வீராங்கனைகளும் உள்ளடங்குவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த பாதுகாப்பு பணிகளுக்காக இலங்கை இலேசாயுத காலாட் படையணினைச் சேர்ந்த படைவீரர்கள் இரண்டு கட்டங்களில் புறப்பட்டுச் சென்றதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

பயணமாகவுள்ள படையினரை வழியனுப்பி வைப்பற்காக இலேசாயுத காலாட்படையணியின் படைத் தளபதியும் இராணுவ அதிகாரிகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 அதிகாரிகள் மற்றும் 67 பேர் கொண்ட முதல் குழு அமைதி காக்கும் பணிகளுக்காக பெப்ரவரி 5 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.