“சயுரல” கப்பல் இந்தியாவில் மிலன்-2022 கடற்படை பயிற்சியில் பங்கேற்பு

மார்ச் 07, 2022

• சிலினெக்ஸ் இருதரப்பு பயிற்சியிலும் கடற்படை பங்கேற்பு

இலங்கை கடற்படைக் கப்பல் “சயுரல” அன்மையில் இந்திய கடற்படையால் நடத்தப்பட்ட மிலன்-2022 எனும் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்றது.

இதற்கமைய, மிலன் கூட்டு கடற்படை பயிற்சியின் 11 வது தொடர் விசாகப்பட்டினம் துறைமுகத்திலும் இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியிலும் பெப்ரவரி 25 முதல் மார்ச் 04ம் திகதி வரை நடைபெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய மற்றும் பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள நாடுகளில் இருந்து பல கடற்படைகள் மற்றும் கடல்சார் பங்காளிகள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதாகவும் இந்த கூட்டுப் பயிற்சி ‘தோழமையுடன் ஒன்றிணைந்து செயற்படுதல் ’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

இந்த கூட்டுப்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. துறைமுகங்கள் தொடர்பான முதற் கட்ட பயிற்சி விசாகப்பட்டின துறைமுகத்தில் பெப்ரவரி 25 முதல் 28 வரை நடைபெற்றது, மேலும் கடல் பயிற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்டம் மார்ச் 01 முதல் 04ம் திகதி வரை இந்தியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நடத்தப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

பயிற்சியின் போது, ​​கடற்படையின் தெற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சஜித் கமகே மற்றும் சயுரல கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் ஜயந்த பண்டார ஆகியோர் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்தனர்.

இந்திய கடற்படைத் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளித்ததுடன், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.