ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி நிறுவனத்தின் செயற்கை கால்கள் வழங்கும் நடவடிக்கைக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு தெரிவிப்பு

மார்ச் 07, 2022

போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘செயற்கை கால் பொருத்தும் முகாம்’ இனது நிறைவு விழா இன்று (மார்ச்,07) ராகமவில் அமைந்துள்ள ரணவிரு செவனவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில், இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி எனும் நிறுவன அதிகாரிகளைக் கொண்டு 35 நாட்களாக இடம்பெற்ற 'செயற்கை மூட்டு பொருத்துதல் முகாம்' முப்படை மற்றும் பொலிஸ் பிரிவின் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு வசதியளிக்கும் வகையில் நடைபெற்றது. .

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி எனும் நிறுவனம் 1975ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் செயற்கை கால்கள் மற்றும் பிற தொடர்புடைய நிவாரணங்களை வழங்குவதில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலகின் மிகப்பெரிய அமைப்பாகவும் அறியப்படுகிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், “தேசத்தின் எதிரியினது நோக்கத்தை அடைய விடாது அவர்களை தோற்கடித்த அந்தத் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன்” மேலும், “தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த எங்கள் அன்புக்குரிய தாய்நாட்டின் மகன்களுக்கும் மக்களின் ஒற்றுமைக்காகவும் நாட்டின் இறையாண்மைக்காகவும் இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீரை சிந்தி தமது அவயவங்களை தியாகம் செய்த வீரர்களையும் முழு தேசத்தின் நன்றியும் உரித்தாக வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

அண்மைக்காலமாக ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நலன்புரி நடவடிக்கைகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த திட்டத்தை நடத்துவதற்கு பங்களித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட ஜெனரல் குணரத்ன, இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் அங்கவீனத்தால் பாதிக்கப்படும் அனைத்து நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி எனும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்புக்களையும் அவர் பாராட்டினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவு தொடர்பாக குறிப்பிட்ட அவர், “இந்து சமுத்திர பிராந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த பரஸ்பர புரிந்துணர்வு, சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை நிலைநிறுத்துவதில் பொதுவான நலன்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்திய அண்மைக் காலங்களில் பல தொடர்புகள் காரணமாக அது மேலும் வலுவடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த உன்னத நோக்கத்திற்காக ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி எனும் நிறுவன தொழில்நுட்ப நிபுணர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஜெனரல் குணரத்ன வழங்கி வைத்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லேயின் அனுசரணையில் இந்திய அரசாங்கத்தின் 75 வது சுதந்திர தினம் மற்றும் இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-இலங்கை சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் போது இது ஆரம்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையுடன் இணைந்து ரணவிரு சேவா அதிகார சபை தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவின் (ஓய்வு) முழுமையான ஒருங்கிணைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ரணவிரு சேவா அதிகார சபை தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு), அதன் துணைத் தலைவர், சோனியா கோட்டேகொட, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் விகாஸ் சூட், தூதரக அதிகாரிகள், பகவான் மஹாவீர் விக்லாங் சஹயத சமிதி நிறுவனகுழு உறுப்பினர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.