நான்கு வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

மார்ச் 10, 2022

பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இம்மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைந்தன.

பிரான்ஸ் கடற்படையின் ஆதரவு மற்றும் உதவிக் கப்பல் ‘லோயர்’ செவ்வாய்க்கிழமை (08) கொழும்பை வந்தடைந்த அதேவேளை, பங்களாதேஷ் கடற்படையின் கொர்வெட் பிஎன்ஸ் ‘புரோட்டாஸா’ மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களான ‘தல்வார்’ மற்றும் ‘பிரம்மபுத்ரா’ ஆகியவை புதன்கிழமை (09) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரஞ்சுக் கப்பல் மற்றும் இரண்டு இந்தியப் போர்க் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து இலங்கையில் தங்கியிருக்கும் போது தனித்தனியாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கப்பல் மற்றும் இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்கள் எதிர்வரும் 11ம் திகதி நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள அதேவேளை, பிரெஞ்சு கடற்படை கப்பல் எதிர்வரும் 12ம் திகதி புறப்படவுள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த பயிற்சி நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படவுள்ளதென கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.