மாலைதீவில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாடு, 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் நிறைவு

மார்ச் 14, 2022

ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஸ்தாபக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 மார்ச் 09 மற்றும் 10ம் திகதி மாலைதீவுக் குடியரசில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாலைதீவு, இந்தியா, இலங்கை மற்றும் மாநாட்டின் புதிய உறுப்பு நாடான மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அதேவேளை, பங்களாதேஷ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத் தொடரில் 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்புக் கூட்டம் இறுதியாக 2020, நவம்பர் 28ம் திகதி இலங்கையில் நடைபெற்றது.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது கூட்டம் 2011ஆம் ஆண்டு இலங்கையின் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முயற்சியினால் இடம்பெற்றது.

ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டத்தில் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உஷா மரியா தீதி, இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் கே.சி., இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, மொரிஷியஸ் குடியரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குமரேசன் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை பங்களாதேஷ் தூதுக்குழுவிற்கு பங்களாதேஷ் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் தாரிக் அகமது சித்திக் தலைமை தாங்கியதுடன் சீஷெல்ஸ் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சைமன் ஆர்கேஞ்ச் டைன் சீஷெல்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
 
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் பொதுவான விடயங்களை கண்கானித்தல் மற்றும் பின்தொடர்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன் இந்த மாநாட்டிற்கான நிரந்தர செயலகத்தை இலங்கை கொண்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பின்வரும் ஐந்து விடயங்கள் தொடர்பாக பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகள் கூட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டன:

  • கடல்சார் பாதுகாப்பு,
  • தீவிரவாத எதிர்ப்பு
  • கடத்தல் மற்றும் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்
  • சைபர் பாதுகாப்பு, முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு
  • மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் உறுப்பு நாடுகள் தமக்கிடையே ஒத்துழைப்புடனும் ஒன்றிணைந்து செயற்படவும் இக் கூட்டத்தொடரின் போது உறுதி பூண்டன. அத்துடன், உறுப்பு நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும் இதுபோன்ற நிகழ்வுகள் வழி வகுக்கவுள்ளது.

கடல்சார் அண்டை நாடுகள் இதேபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான நிலையான கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.