“சத்விறு சந்ஹிந்த” திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஜனாதிபதியினால் படைவீரர்களுக்கு கையளிப்பு

மே 10, 2017

பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி அவர்கள் வருகை தந்திருந்த அதிதிகளை வரவேற்றதுடன் குறித்த இச்செயற்றிட்டத்தின் இலக்குகள் குறித்தும் சுருக்கமாக விளக்கமளித்தார்.

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றும் போது வெசாக் புண்ணிய தினமான இன்று படைவீரர்களுக்கு அளிக்கப்படும் சேமலாபம் மற்றும் கௌரவம் என்பன உயர்ந்த புண்ணிய நிகழ்வு என்பதால் தாம் இந்நிகழ்விற்கு முக்கியத்துவம் அளித்து வருகை தந்தாக குறிப்பிட்டார்.

மேலும் அவர், சாமாதானம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் பெறுமானங்களை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் அவற்றை எமக்கு பெற்றுத்தந்த படையினரை எப்பொழுதும் மதிப்புடனும் மரியாதையுடன் நோக்குவது அவசியமாகும் எனவும் எமது படையினருக்காக பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சேமலாப திட்டங்கள் ஒப்பீட்டளவில் கடந்த இரண்டரை வருடங்களில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் சேவையில் உள்ள படைவீரர்களின் அறிவு, திறன் மற்றும் தரத்தினை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது தாய் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட எமது படைவீரர்களை எமது உள்ளத்திலும் நினைவிலும் இருத்தி அவர்களுக்காக மேலும் பல்வேறு சேமலாப திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டவைகளை முழுமைப்படுத்துவதற்காக நிதியளிக்கப்பட்ட 503 வீடுகள் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கென அளிக்கப்பட காணிகள் 65 என்பனவற்றுக்கான அனுமதிப்பத்திரங்கள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமது திறன்களை வெளிக்காட்டிய படைவீரர்களின் 77 குழந்தைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத்தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.