பாதுகாப்பு செயலாளரினால் 2022 ஏப்ரல் 11 ஆம் திகதி
மேற்கொள்ளப்பட்ட விஷேட அறிக்கை

ஏப்ரல் 11, 2022

மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
 
தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய பாதுகாப்புச் செயலாளர், இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர்கள் கலந்துகொள்ளும் வழிமுறை இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.

தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், திறைசேரியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சட்டப்பூர்வ உறுப்பினர்களாக பங்கேற்கும் அதேசமயம், தேசிய புலனாய்வு பிரதானி, அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் நாயகம், இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் நாயகம், குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர், பங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் பங்கு கொள்கின்றனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான அனைத்து விதமான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்தது என்பதால், ஜனாதிபதியின் செயலகத்தால் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர் அழைக்கப்படவோ/அனுமதிக்கப்படவோ இல்லை.

தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம், சம்பந்தப்பட்ட குறித்த நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னர் குறித்த விவகாரம் கையாளப்படும்.

எனவே, ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தவறானது மற்றும் ஆதாரமற்றது.தேசிய பாதுகாப்பு விடயங்களில் இவ்வாறான தவறான தகவல்களை நம்புவதைத் தவிர்க்குமாறு ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்துகிறது.நாட்டிலுள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மேற்பார்வை செய்யும் பாதுகாப்பு அமைச்சு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் பாதுகாப்பு அமைச்சு அதன் புதிய தகவல்களை தொடர்ந்தும் வெளியிடும்.