முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு அன்பளிப்பு

ஏப்ரல் 13, 2022

முன்னாள் விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு, இலங்கை இராணுவத்தால் (SLA) கட்டப்பட்ட புதிய வீடு ஒன்று அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சரியான வீடொன்றில்லாமல் தன் குடும்பத்துடன் அவதிப்பட்டு வந்த மயிலாடியைச் சேர்ந்த ராசவல்லன் தபோரூபன் எனும் முன்னாள் போராளிக்கு இராணுவ ஆள்பலம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டதாக இராணுவ செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்முன்னாள் போராளி 2021 ஜூன் 24 அன்று ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டார். அவரது அவலநிலை இராணுவத் தளபதிற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

10 இலங்கை பீரங்கி படை துருப்புக்களால் தனியார் ஒருவரின் நிதி உதவியின் கீழ் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திங்கலன்று (ஏப்ரல் 11) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்திலிருந்து ஜூம் தொழில்நுட்பம் ஊடாக மைலடியில் நிகழ்ந்த புது வீடு புகும் நிகழ்வில் இணைந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் கட்டுமான பணிகளுக்கு நிதியுதவியளித்த திரு. விஷ் நடராஜா இருவரும் இணைந்து புதிய வீட்டின் சாவியை முன்னாள் போராளி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கையளித்ததாக இராணுவ ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.