புதிய அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஏப்ரல் 20, 2022இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (ஏப்ரல் 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து சந்தித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்க தூதுவரை வரவேற்றனர்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தும் அமெரிக்க தூதுவரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் ஜெனரல் குணரத்ன மற்றும் அமெரிக்க தூதுவரும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக இவ்வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பு வந்த சுங் அவர்கள் தனது நச்சாண்று பத்திரத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் பெப்ரவரி 25 ஆம் திகதி கையளித்தார்.
புதிய அமெரிக்க தூதுவர் அமெரிக்க வெளியுறவு சேவையின் அமைச்சர் ஆலோசகர் பதவி நிலையில் ஒரு மூத்த அதிகாரியாவார். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளில் மூத்த பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, அமெரிக்க தூதகரத்தின் பிரதம அரசியல்/பொருளாதார அதிகாரி சூசன் வால்க் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் ட்ராவிஸ் கொக்ஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.