--> -->

மற்றுமொரு முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு நிர்மாணம்

மே 05, 2022

யாழ்ப்பாண குடாநாட்டில் மிகுந்த கஷ்டத்திட்கு மத்தியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி ஒருவருக்காக புதிய வீடொன்றை நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் பருத்தித்துறை, புலோலியில் வசிக்கும் முன்னாள் போராளிக்கான உத்தேச வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
 
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி, மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவின் ஆசீர்வாதத்துடன், 16 இலங்கை இலகுரக காலாட்படையினர், தனியார் நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன் இந்த வீட்டை நிர்மாணிக்கும் பணியை மேற்கொள்வதாக, மேலும் கூறுகிறது.

முன்னாள் போராளிகளான தங்கராசா தர்மராணி மற்றும் குமாரகுலசிங்கம் பிரசாந்தன் இருவரின் ஏழ்மை நிலையை அறிந்த பின்னர் இராணுவத்தினர் அவர்களுக்காக வீடொன்றை நிர்மாணிக்க நடவடிக்கையை எடுத்ததாக இராணுவ வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

551 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்ரமசிங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்து சமய முறைப்படி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.