தென்மேற்கு பகுதிக்கு 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யும் - வானிலை மையம்

மே 14, 2022

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை மாவட்டம் (புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரிவுகள்) கண்டி மாவட்டம் (கங்க இஹல கோரளை மற்றும் பஸ்பாகே கோரளை பிரிவுகள்), கேகாலை மாவட்டம் (யட்டியந்தோட்டை, அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரிவுகள்), மாத்தறை மாவட்டம் மற்றும் கொட்டபெத்தர பிரிவுகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி மாவட்டம் (கலவான, குருவிட்ட, நிவித்திகல, எலபாத, அயகம, எஹலியகொட, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல). நுவரெலியா மாவட்டம் (அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரிவுகள்) மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு (இம்புல்பே) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 2 ஆம் நிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இதன்படி, மழைக்காலங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.