கடற்படையினரால் நோயுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வர உதவி

மே 16, 2022

கடலில் வைத்து சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், நேற்று மாலை (மே 15) இலங்கை கடற்படையினரால் சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடகங்களின்படி, உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு ‘சிந்தூர் 04’ ல் இருந்த மீனவர் ஒருவர் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் இதுகுறித்து அறிவிக்கப்பட்டதற்கமைய, நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்குக் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை அதன் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து 'ரனரிசி' எனும் விரைவு படகை அனுப்பியது.

மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து சுமார் 18 கடல் மைல் (சுமார் 33 கிலோமீற்றர்) தொலைவில் உள்ள கடற்பரப்பில் நோயாளியை ஏற்றிக்கொண்டு கடற்படை 'ரனரிசி' படகு கரைக்குத் திரும்பியது. நோயாளியை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு மாற்றுவதற்காக கடலோரக் காவல்படையின் சிறிய படகொன்று பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்து நோயாளி சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.