பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்

மே 17, 2022

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (மே 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

குறிப்பாக பாராளுமன்ற அமர்வுகளின் போது பாராளுமன்றம், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது மேட்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேயவர்தன அவர்கள் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.