தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா ஜனாதிபதியின் பங்கேடுப்புடன் நடைபெற்றது

மே 19, 2022

13வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (மே 19) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேடுப்புடன் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் ஆயுதப் படைகள் பயங்கரவாதத்தை தோற்கடித்து மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, 2009 மே 18 நாட்டில் அமைதியை நிலைநாட்டினர். பயங்கரவாதிகளுடனான போரின் போது ஏராளமான போர்வீரர்கள் தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்ததுடன் பலர் காயமடைந்தனர்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உயர் தியாகங்களைச் செய்த அனைத்துப் போர்வீரர்களும், அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவைகளும் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டன.

ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது, பயங்கரவாதிளுக்கு எதிராக போரிட்ட வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டதுடன், தேசிய கீதம் பாடப்பட்டு, போர்வீரர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, போலீஸ் மாஅதிபர் சி.டி விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு), மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் பிரதிநிதிகள், முப்படை , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.