வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கடற்படை உதவி

மே 25, 2022

•    வெள்ள நிலைமைகளுக்கு முகங்கொடுக்க கடற்படை தயார் நிலையில்

கலவான பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை (SLN) இன்று (25) வெள்ள நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது.

வெள்ள பாதிப்பு பிரதேசங்களுக்கு அனுப்ப மேலும் பல நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
 
நேற்றைய தினம் (24) புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு சாதாரண தர பரீட்சைக்குத் தோன்றும் மாணவர்களுக்கு கடற்படையினர் உதவினர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் பணிப்புரைக்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளை தளத்தினால் புத்தளத்தில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு நிவாரண குழுக்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய, சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு பாதுகாப்பாக பரீட்சை நிலையங்களுக்கு சென்று வீடு திரும்ப உதவியளிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.
 
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கமைய கடற்படையினர், சாதாரண தர மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் இரத்தினபுரி, கலவனையிலுள்ள தெல்கொட விகாரைக்கு நிவாரண குழுக்களை நேற்று மாலை அனுப்ப நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.