கடலோர பகுதிகளில் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நடுகை
மே 26, 2022மன்னார் மற்றும் அருகங்குடா கரையோரப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் பல நூறு கண்டல் தாவர கன்றுகளை நட்டுள்ளனர். கடற்படை ஊடகங்களின்படி, மன்னார் கரையோரப் பகுதியில் 1200 கண்டல் தாவரக் கன்றுகள் நடப்பட்டதுடன், மேலும் 250 கண்டல் தாவரக் கன்றுகள் அருகங்குடா பகுதியில் அண்மையில் (மே 20 மற்றும் 21) நடப்பட்டன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டல் தாவர நடுகை வேலைத்திட்டத்தில் வடமத்திய மற்றும் தென்கிழக்கு கடற்படைக் கட்டளைகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பங்குபற்றினர்.
அதேபோன்று, அண்மையில் (மே 20) மண்டைதீவு தீவு மற்றும் யாழ்ப்பாணம் பொன்னாலைக் குளத்தின் கரையோரப் பகுதிகளிலும் கண்டல் தாவரங்கள் நடப்பட்டன. கடற்படை யின் சதுப்புநில கண்டல் தாவர பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளை தளத்தினால் மண்டைதீவு மற்றும் பொன்னாலைக் குளத்தின் கரையோரப் பகுதிகளில் 3800 கண்டல் தாவரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
சதுப்புநில கண்டல் தாவரங்கள் கடல் சுற்றுச்சூழலின் ஒரு முக்கிய அங்கமாகும். கடல் சுற்றுச்சூழலின் சீரழிவுக்கு மனித செயல்பாடுகள் முக்கிய காரணமாகும். இலங்கை கடற்படை அதன் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சதுப்புநில கண்டல் தாவர பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், இதுவரை ஆயிரக்கணக்கான கண்டல் தாவர கன்றுகள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் நட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.