புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்பு

ஜூன் 01, 2022

லெப்டினன்ட் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே இராணுவத் தலைமையகத்தில் இன்று (ஜூன் 1) இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய இராணுவ தளபதிக்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கஜபா படைப்பிரிவினரால் இராணுவ மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கான முறையான ஆவணத்தில் லெப்டினன்ட் ஜெனரல் லியனகே அவர்கள் கையொப்பமிட்டதாக இராணுவ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மதப் பிரமுகர்களிடமும் புதிய இராணுவ தளபதி ஆசி பெற்றார்.

தமது 35 வருட இராணுவ வாழ்க்கையில், அவர் பல உயர் பதிவிகளை வகித்துள்ளதுடன் இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக கடமையாற்றினார். பிரதிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு புதிய இராணுவ தளபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.