இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

ஜூன் 15, 2022

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியால் (SLCOMM) மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் (ஜூன் 13) சீதூவையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது.

இலங்கை விமானப்படை (SLAF) ஊடகங்களின்படி, இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் நடாத்தப்படும் பல திட்டங்களில் நிகழ்ச்சிகளில் இதும் ஒன்றாகும். பொசன் போயா தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் இந்த மருத்துவ கிளினிக் நடத்தப்பட்டது. சுமார் 300 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு பொது மருத்துவம், பல், கண், மனநல மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் 100 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகம் தொழிற்பயிற்சி நிலையத்தின் வளாகத்தை சுத்தம் செய்ய'சிரமதான' நிகழ்ச்சி, பிரதான கேட்போர் கூடம் உட்பட கட்டிடங்களை புதுப்பித்தல், மற்றும் விமானப்படை இசைக்குழுவின் பொசன் பக்தி பாடல் நிகழ்ச்சி ஆகியவையும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நலன் விரும்பிகளின் நன்கொடைகளுடன் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரமும் நிறுவப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடத்தப்பட்டது. முழு நிகழ்ச்சித்திட்டமும் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவர் எயார் கொமடோர் (டாக்டர்) நிலுக அபேசேகரவினால் ஒருங்கிணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.