கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட நாடுகடந்த குற்றச்செயல்கள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உயர்மட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

ஜூன் 20, 2022

• அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர், இலங்கை பாதுகாப்பு செயலாளர்  சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கிலையார் ஓ நீல் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (ஜூன் 20) சந்தித்தார்.

இதேவேளை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலியினால் அழைத்துவரப்பட்ட  உயர்மட்ட தூதுக்குழுவை பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.  அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போது  இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் இக்கலந்துரையாடலின் போது ஆட்கடத்தல் உள்ளிட்ட நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில்  கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகைதந்த வெளிநாட்டு தூதுக்குழுவில்  அவுஸ்திரேலிய எல்லைப் படை ஆணையாளர்  மைக்கேல் அவுட்ராம், கூட்டு செயலணியின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸின் நாடுகடந்த நடவடிக்கைகள் பிரிவின்  தளபதி ரிச்சர்ட் சின், தூதுவர் மற்றும் மக்கள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் கிளையின் உதவி செயலாளர் லூசியன் மாண்டன் மற்றும் அவுஸ்திரேலிய உதவி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜூவல் உட்பட பல அவுஸ்திரேலி உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் அடங்குவர்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க, தேசிய புலனாய்வு பிரதானி  ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, அரச  புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியும் இலங்கை சார்பில் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இந்த விஜயத்தைக் குறிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன தூதுக்குழுவின் தலைவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.