கஞ்சா போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றினர்
ஜூலை 06, 2022இலங்கை கடற்படையினர் இன்று (ஜூலை 6) நுரைச்சோலை ல் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 212 கிலோகிராம் கேரள கஞ்சாவை வேன் ஒன்றில் கொண்டு செல்லும் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட ‘எஸ் எல் என் எஸ் தம்பபன்னி’ யின் படையினர், நொரோச்சோலை பொலிஸாருடன் இணைந்து இன்று காலை நுரைச்சோலை, கரம்பை வீதித்தடையில் சந்தேகத்திற்கிடமான வேனை சோதனையிட்ட போதே மேற்படி கஞ்சாவை மீட்டுள்ளனர். 10 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 97 பொட்டலங்களில் கண்டெடுக்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ரூ. 63 மில்லியனுக்கு அதிக வீதி மதிப்பை கொண்டது என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சாவும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வேன் என்பன நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.