ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்

ஜூலை 07, 2022

 

• ஜெனரல் கமல் குணரத்ன புதிய ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகரையும் வரவேற்றார்

இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ககு ஃபுகௌரா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (ஜூலை 07) பாதுகாப்பு அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமிர்த்தம் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகைதந்த கெப்டன் ஃபுகௌரா மற்றும் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவிருக்கும் கெப்டன் யூகி யோகோஹாரி ஆகியோரை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன வரவேற்றார்.

இதேவேளை, தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்கு கெப்டன் ஃபுகௌரா இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால இருதரப்பு நல்லுறவுகளை நினைவுகூர்ந்த ஜெனரல் குணரத்ன, இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் பேணிய நெருக்கமான ஒத்துழைப்பிற்காக ஜப்பானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக தனது சேவைகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள கெப்டன் ஃபுகௌராவை பாராட்டினார்.

மேலும் அவரின் இராணுவ வாழ்க்கையில் வளமான எதிர்காலத்திற்காக பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவிருக்கும் கெப்டன் யோகோஹாரியையும் பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடலின் போது வரவேற்றார்.

இன்று இடம்பெற்ற இச்சந்திப்பை நினைவு கூறும் வகையில், பாதுகாப்பு செயலாளரும் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.