புதுப்பொலிவுடன் கூடிய www.defence.lk இணையத்தளம் பாதுகாப்பு செயலாளரினால் மீள அறிமுகம்
ஆகஸ்ட் 26, 2019பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இன்று (ஆகஸ்ட்,26)ம் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் உத்தியோகபூர்வமாக மீள அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இணையத்தளத்தினை மீள அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளரின் ஒருங்கிணைப்பு செயலாளரும் ஆலோசகருமான திரு. சுரேன் தயரத்ன அவர்களினால் வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் சேர்த்தல் பற்றிய ஒரு கண்ணோட்டத்துடன் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து வலைத்தளத்தின் புதிதாக உட்புகுத்தப்பட்ட மற்றும் மேம்பட்ட அம்சங்களை விளக்கும் சுருக்கமான வீடியோ விளக்கக்காட்சி இடம்பெற்றது.
இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சினது ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் அழைபின் பேரில், பாதுகாப்பு தகவல் பிரிவின் பல மாதங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியின் பயனாக உருவாக்கப்பட்ட புதிய வலைத்தளம் உலக பார்வைக்கு பாதுகாப்பு செயலாளர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மேலும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வலைத்தளத்தைப் பார்வையிட்ட பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு தகவல் பிரிவின் கீழ் கடமையாற்றும் முப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், இராணுவ பேச்சாளர் மற்றும் ஊடக மையத்தின் பணிப்பாளர், இராணுவ இணைப்பு அதிகாரி, விமானப்படை மற்றும் கடற்படையின் ஊடக பேச்சாளர்கள் மற்றும் சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வலைத்தளம் அதன் மையக்கருத்தினை பேணி அனைவரையும் கவரும் பயனாளர் இடைமுகம், கவர்ச்சிகரமான விடய உள்ளடக்கம் உள்ளிட்ட பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இலங்கை அரச இணைய தளங்களில் பிரபல்யம் வாய்ந்த ஒன்றாகும். இது மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த இணையத் தளமாகவும் திகழ்கிறது.
இவ் இணையத்தளம், 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த உண்மையான மற்றும் புதுப்பித்த செய்திகளை வழங்கும் நோக்கிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சொந்த நலன்களைக் கருத்தில் கொண்ட குழுக்களினது உண்மைக்கு புறம்பான தகவல் பிரச்சாரத்திற்கு பதில் வழங்கும் நோக்கிலும் இவ் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களின் இணைய பாவனை ஆரம்பகட்டத்தில் இருந்த வேளையில் நாட்டில் தொடங்கப்பட்ட அமைச்சுகளில் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் ஒன்றாகும்.
இவ் இணையத்தளம், மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உண்மையான மற்றும் சரியான தகவல்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த தகவல்களையும் பயனாளர்களுக்கு வழங்குகிறது.
போர் முடிவுற்ற பின்னர், நல்லிணக்க செயல்முறை மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் இவ் இணையத்தளம், ஒரு புதிய போக்குடன் பயணித்ததுடன் தேசிய பாதுகாப்பின் உண்மையான நோக்கங்களையும் பேணியது.
இணையம் மற்றும் மொபைல் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு காலத்தின் தேவை கருதியும் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கமைவாகவும் குறித்த இணையத்தளத்தில் மாற்றத்திற்கான தேவை உணரப்பட்டது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள பாவனையாளர்கள் எளிதாக அணுகும் வகையில் அதன் பயனாளர் இடைமுகம் அமைந்துள்ளது. இது பயனாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் பல்வேறுபட்ட தொழிநுட்ப அம்சங்கள் இவ் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அண்மைய செய்திகளுடன் 24/7 மணி நேரமும் அர்ப்பணிப்புள்ள குழுவினரால் இணையத்தளம் தொடர்ந்து இற்றைபடுத்தப்படுகிறது. முப்படைகள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பிற நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் இவ் இணையதளத்தில் மேலேற்றம் செய்யப்படுகின்றது. அத்துடன் பாதுகாப்பு அமைச்சு வழங்கும் சேவைகள் குறித்த தகவல்களையும் பயனாளர்களுக்கு வழங்கிவருகின்றது.
புதிய இணைய தளம், அனைவரையும் கவரும் பயனாளர் இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தகவல்களை விரைவாக அணுக வழிவகுப்பதுடன் இணைய உலாவலை மிகவும் திறமையாக மேற்கொள்ளவும் இணைய பக்கங்களில் இருந்து விரைவாக வெளியேறிச் செல்லவும் வழிவகுக்கின்றது. பயனாளர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேடுபொறி உகப்பாக்கம் ஆகியன இவற்றில் உள்ளடக்கப்பட்ட புதிய அம்சங்களில் சிலவாகும். மேலும் இதில் ஜனாதிபதியின் தளத்தினை விரைவாக அணுக முடிவதுடன் போலி செய்திகளை சரிபார்க்கும் வசதிகளையும் கொண்டுள்ளது.