காயமடைந்த இராணுவத்தினரைப் பார்வையிட பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்

ஜூலை 15, 2022

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஜூலை, 15) விஜயம் செய்தார்.

கடந்த புதன்கிழமையன்று (13) பத்தரமுல்ல, பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் கடமையில் இருந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான படை வீரர்களின் உடல்நலம் குறித்து இதன் போது நேரில் விசாரித்தார்.

இந்த விஜயத்தின் போது பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அதேவேளை, சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களின் நலன்களை விசாரித்தார்.

பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் படைவீரர்கள் ஆற்றிய கடைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அர்ப்பணிப்புடன் கடமையில் ஈடுபட்ட குறித்த இராணுவ வீரர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் தேவையான நலன்புரி வசதிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்க இராணுவ வைத்தியசாலைக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.

பதில் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இராணுவ வைத்தியசாலையில் கடமையாற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.