கடலோர பாதுகாப்பு படை கப்பல் அதிகாரமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர்

ஜூலை 23, 2022

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான 'ஜயசாகர' விற்கு ஆணை அதிகாரம் அளிக்கும் நிகழ்வு திருகோணமலை துறைமுக நகரில் இன்று (ஜூலை, 23)  இடம் பெற்றது.

இன்று காலை கோலாகலமாக இடம் பெற்ற ஆனை அதிகாரம் அளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இந்த கப்பலுக்கு ஆணை அதிகாரம் அளிக்கபட்டது.

நிகழ்விடத்திற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் குணரத்னவை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க வரவேற்றார்.
 
இதன்போது பாதுகாப்பு செயலாளருக்கு கரையோரப் பாதுகாப்பு படையினரால் மரியாதை அணிவகுப்பளிகப்பட்டது.  இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்னவும் கலந்துகொண்டார்.

தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர், கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் (ND) மஹநாம திலகரத்னவிடம் அதிகாரமளிப்பு பத்திரத்தை வழங்கி வைத்தார்.  அதிகாரமளிப்பு பத்திதத்தை பெற்றுக் கொண்ட கப்பலின் கட்டளை அதிகாரி சம்பிரதாயபூர்வமாக  அதை வாசித்தார்.

ஜெனரல் குணரத்ன,  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகமும் கடற்படையின் பிரதம அதிகாரியுமான  ரியர் அட்மிரல் ஏக்கநாயக்க ஆகியோர் கப்பலில் ஏறி, கப்பலின் முகப்பு மற்றும் பெயர்ப் பலகையை வணக்கத்துக்குறிய   மகா சங்கத்தினர் மற்றும் சமய தலைவர்களின் ஆசீர்வாத்திற்கு மத்தியில் திரைநீக்கம் செய்து வைத்தனர்.

இதன் போது  இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலின் சிறப்பம்சங்கள், வசதிகள் மற்றும் செயல்பாட்டு பண்புகள் குறித்து  கடலோரப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகத்தினால் பாதுகாப்பு செயலாளருக்கு  விளக்கமளிக்கப்பட்டது.

கடலோர பாதுகாப்பு படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ரியர் அட்மிரல் ஏக்கநாயக்கவினால்  பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்று பரிசளிக்கப்பட்ட  அதேவேளை, பாதுகாப்பு செயலாளரினால் கரையோரப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

39.8 மீற்றர் நீளமும்  7 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 313 டொன் எடை கொண்டது. 3200 கடல் மைல்கள் கடல் சஞ்சரிப்பு காலத்தைக் கொண்ட இந்த கப்பல், 10 அதிகாரிகள் உட்பட 78 படை வீரர்கள் பயணிக்கும் வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
 
இந்த ஆண்டு ஜனவரியில் (03) கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆழ்கடல் ரோந்து கப்பல் இலங்கை கடற்படை வசம் இருந்தது.  இந்த ஆழ்கடல் ரோந்துக் கட்டல் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது குறிப்பிடத்தக்க பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

முப்படைகளின் தளபதி யும் நாட்டின் தலைவரின் பிரதிநிதி ஒருவரினால்  இவ்வகை கப்பல்களுக்கு வழக்கமாக ஆணையதிகாரம் அளிக்கப்பட்டு வருகின்றது.

கடலோர பாதுகாப்பு படையின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடலோரக் பாதுகாப்பு படையில் இணைந்து புதிய வகிபாகத்துடன் நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றவுள்ளது.

இந்நாள் நிகழ்விற்கு வருகை தருவதற்கு முன்னர்,  ஜெனரல் குணரத்ன, கடற்படைத் தளபதியுடன் இணைந்து கடற்படைத் தளத்திலிருக்கும் கடற்படைப் போர்வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த அதிகாரமளிப்பு நிகழ்வில் மகா சங்கத்தினர், சமய தலைவர்கள், கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்புப் பிரிவினர்களும்  கலந்துகொண்டனர்.