யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இராணுவ கடற்படை உதவி

ஆகஸ்ட் 01, 2022

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அவற்றின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இதற்கமைய குமண தேசிய பூங்கா நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பகுதியில் யாத்திரிகர்களுக்கு மருத்துவ மற்றும் உயிர்காக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் அறிவுறுத்தளுக்கமைய தென்கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும அவர்களின் வழிகாட்டுதளுடன் யாத்திரிகர்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் அப்பகுதிகளில் கடற்படை வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குமண முதல் கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் செல்லும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பதற்காக குமண தேசிய பூங்காவின் நுழைவாயில் பாத யாத்திரைக்காக ஆகஸ்ட் 05 வரை திறந்திருக்கும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை இராணுவத்தின் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 122வது படைப்பிரிவு மற்றும் 23 கஜபா படைப்பிரிவின் துருப்புக்கள் சமைத்த உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் யாத்ரீகர்கள் ஓய்வெடுக்க தற்காலிக தங்குமிட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தளுக்கமைய 12 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவப் படையினர் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து பெருந்தொகையான யாத்ரீகர்கள் கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வருடம் யாத்திரையை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.