பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் (NAHTTF) விசேட செய்தியாளர் சந்திப்பு:

ஆகஸ்ட் 04, 2022

வருகை விசாக்களுடன் வந்து அவற்றை பின்னர் வேலை விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்  மலேசியாவிற்கு வருகைதரும் இலங்கையாக்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின்  (NAHTTF) கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தகைய வருகைகள் காரணமாக, மலேசிய குடிவரவு அதிகாரிகள் வருகை விசா வைத்திருப்பவர்கள் தொடர்பில் ஆய்வு செய்வதட்கு அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட சுமார் 20 இலங்கையர்கள் வாராந்தம் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருகை விசாவில் மலேசியாவிற்கு நுழைவதற்கு அனுமதி பெற்ற பலர் தாம் 'வேலை முகவர்களால்' ஏமாற்றப்பட்டதை பின்னர் உணர்ந்துள்ளது மட்டுமன்றி, மேலும் அவர்கள் குறைந்த ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் அற்ற கடுமையான மனிதாபிமானமற்ற சூழலில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கும் உட்படுத்தப்பட்டு  மனித கடத்தலுக்கு பலியாகின்றனர்.

மேலும் மலேசியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் 2022 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய சட்ட அமலாக்க அதிகாரிகள் செல்லுபடியற்ற விசாக்களுடன் மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கைது செய்ய தொடர்ச்சியாக விசேட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் தங்களுக்குரிய சிறைத்தண்டனை காலம் முடிந்ததன் பின்னர் அவர்களின் சொந்த செலவில்  நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை ஒரு நியமிக்கப்பட்ட தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

எனவே, இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி, 'மலேசியாவுக்கு வருகை விசாவில் வந்து பின்னர் அதை வேலை விசாவாக மாற்ற முடியாது என்பதை குடிமக்களுக்கு தெரியப்படுத்துவதுடன், வெளிநாட்டு வேலை  தேடும் இலங்கையர்களுக்கு அது தொடர்பில் உண்மையான மற்றும் சட்டரீதியான வழிகளை கையாளுமாறும் கேட்டுக்கொள்கிறது.

உங்களுக்கு அவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முதலில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் (SLBFE)  தொடர்புகொண்டு அதன்பிரகாரம் செயல்படுமாறு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி இத்தால் வேண்டுகோள் விடுக்கின்றது.

வருங்கால குடியேற்றவாசிகள் அனைவரும் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் முறையான வழிகளைப் பயன்படுத்தவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்யுமாறும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.