கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
ஆகஸ்ட் 19, 2022தென்பகுதி கடலில் மீன்பிடி நடவைக்கைகளுக்குச் சென்ற மீன்பிடி இழுவை படகொன்றிலிருந்த ஆறு (06) மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை ஊடக தகவல்களுக்கமைய, மூழ்கும் அபாயத்திலிருந்து ‘திலீஷா புத்தா II’ என்ற மீன்பிடி இழுவை படகில் இருந்த ஆறு (06) மீனவர்கள் மீட்கப்பட்டு இன்று (ஆகஸ்ட் 19) காலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
குடாவெல்லை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சில நாட்களுக்கு முன் (16) மீன்பிடிக்கச் சென்ற இப்படகு கடலில் வைத்து கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையினரால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பேரில், குறிப்பிட்ட கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு விபத்துக்குள்ளான படகு குறித்து அவதானமாக இருக்குமாறு பேரிடர் சமிக்ஞை ஒன்றை அனுப்பியது.
இந்நிலையில் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்ட கடற்படையின் விரைவுத் தாக்குதல் படகொன்று, பாதிக்கப்பட்ட மீன்பிடி படகை தென் கடற்பகுதியில் தேவேந்திரமுனையிலிருந்து சுமார் 18.5 கடல் மைல் (34 கிமீ) தொலைவில் கண்டுபிடித்து ஆறு மீனவர்களையும் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தது. பின்னர் அறுவரும் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.