'10வது நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்...

ஆகஸ்ட் 27, 2019

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 10வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - X' அடுத்த வாரம் (செப்டம்பர்,03) ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு பயிற்சி' நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

'நீர்க்காக கூட்டு பயிற்சி- X' நடவடிக்கை, கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளில் எதிர் வரும் 03ம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

10வது முறையாகவும் இடம்பெறவுள்ள இக்களமுனை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்களமுனை பயிற்சியில் மலேசியா, மாலைத்தீவு, நேபாளம், ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் சாம்பியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இப் பயிற்சி, செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள ‘மாதிரி போர் ஒத்திகை’ யின் பின்னர் செப்டம்பர் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது