ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜப்பானின் ஓபர்லின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

ஆகஸ்ட் 31, 2022

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் டோக்கியோவிளுள்ள J. F. ஓபர்லின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 30) கையெழுத்திடப்பட்டது.

இரு பல்கலைக்கழகங்களுக்கிடையே ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை வழங்குவது இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையி நோக்கமாகும். மேலும் இது மாணவர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் கல்வி மற்றும் கற்றல் உபகரணங்கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேய பீடத்தின் கலாநிதி ஹேமந்த பிரேமரத்ன மற்றும் ஓபர்லின் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பின் விளைவாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கப்பட்டது.

மேலும், அதன் பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாண்டு செப்டம்பரில் ஓபர்லின் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யும் என்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வின் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இவ் ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் உறுதியான ஒத்துழைப்பை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதேவேளை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்பக் கழகத்துடன் (AIT) தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அண்மையில் புதுப்பித்துக்கொண்டது. இது இருபல்கலைக்கழகங்களுக்கிடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவதற்காக 2015 இல் கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.