கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்
செப்டம்பர் 01, 2022நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகால நிலைமைகளுக்கு பதிலளிப்பதற்காக நேற்று மாலை (31 ஆகஸ்ட்) வரை 35 நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்த மேற்கு கடற்படை கட்டளையின் 26 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதோடு, தெற்கு கடற்படை கட்டளையின் 09 குழுக்கள் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிவாரணக் குழுக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒருங்கிணைந்து சேவையில் ஈடுபடுத்தப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கைக்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.