--> -->

பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க முடியாது! ஜனாதிபதி

செப்டம்பர் 03, 2022

பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உறுதிசெய்யப்படுதல் அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும். அன்று போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தைக் கைப்பற்றியிருந்தால், நாட்டின் ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். அத்துடன், சட்டத்தின் ஆட்சியும் மீறப்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் பொலிசாரே பாதுகாத்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பொலிசாருக்கும் இதற்கான கௌரவத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஊடகம் என்னதான் பொலிசாரை குற்றஞ்சாட்டினாலும் தனது புகைப் படப்பிடிப்பாளர்களைத் தாக்கியதாக் கூறினாலும், இரு தரப்பினருக்கும் இடையில் சிறந்ததொரு உறவு இருப்பதை இந்த நிகழ்வில் காண முடிந்ததாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
156ஆவது பொலிஸ் தினம் இன்று (3) அனுஷ்டிக்கப்பட்டது. 1866 செப்டம்பர் 03 ஆம் திகதியன்று ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் திணைக்களமானது இந்நாட்டிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த மூன்றாவது அரச நிறுவனமாகும்.

பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட நிகழ்வு நடைபெற்றது. பிரதம அதிதியாக பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதிக்கு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜயந்த குணவர்தன சார்பில் 'ஜனாதிபதி பொலிஸ் வீர பதக்கம்" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்றத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து, விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள சட்ட நிவாரண நிதியத்துக்கு மாற்றீடு செய்யப்படவுள்ள 100 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேற்கத்தேய இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் பொலிஸ் நாய் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி மற்றும் சர்வதேச நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வதேச பொலிஸ் பிரிவு அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்றி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு