அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்துடன் சந்திப்பு

செப்டம்பர் 05, 2022

ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் (ஆகஸ்ட் 31) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் அவுஸ்திரேலிய கூட்டு முகமை செயலணி அதிகாரி, ஆட்கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புக்கான தூதுவர் லூசியன் மெண்டன் மற்றும் ஆட் கடத்தல் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் கிளோடின் லமண்ட் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்களுடன் இணைந்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் மற்றும் முதல் செயலாளர், அவுஸ்திரேலிய எல்லைப் படை பரிசோதகர் பிரட் செஹந்தர் ஆகியோர் கலந்துகொண்டதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது, கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கப்ட்ட உட்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் தொழில்வாண்மை விருத்தி என்பவற்றுக்கு வழங்கப்பட்ட உதவிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் நாட்டில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் ஆட் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானப்படை பிரிவுகளுக்கு எரிபொருளை நன்கொடையாக வழங்கப்பட்டது தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

நாட்டில் ஆட் கடத்தல், போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் தகவல் அறிவிக்கப்படாத மீன்பிடித்தலை தடுக்க கடலோர பாதுகாப்பு படை மேற்கொண்ட அர்ப்பணிப்புடனான சேவையை குறிப்பிட்டதுடன், அண்மைக் காலங்களில் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகள் தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலிய பிரதிநிதிகள், நாட்டில் ஆட்கடத்தல் முயற்சிகளை கட்டுப்படுத்துவதில் கடலோர பாதுகாப்பு படையின் பங்களிப்பு மற்றும் பல்வேறு திறன்களில் படைவீரர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய செயல்திறனுக்கு பாராட்டு தெரிவித்தனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுக்கு உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், மேலும் மேம்பாடுகளுக்காக மற்ற சர்வதேச முன்முயற்சிகளுடன் ஒருங்கிணைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தூதுக்குழுத் தலைவர் ஆகியோர் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.