கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற முதல் இராணுவ பெண்கள் குழுவுக்கு இராணுவ தளபதியினால் சான்றிதழ் வழங்கி வைப்பு
செப்டம்பர் 09, 2022கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற 54 பேர் அடங்கிய முதலாவது இராணுவ பெண்கள் குழுவுக்கு வியாழக்கிழமை (செப். 08) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தளபதியினால் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இராணுவ தகவல்களுக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, சர்வதேச தரத்திலான மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியை முடித்த 3 பெண் அதிகாரிகள் மற்றும் 51 ஏனைய தர இராணுவ பெண் கண்ணிவெடி அகற்றும் குழுவினருக்கு இந்நிகழ்வின் போது சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இக்குழுவினருக்கான கண்ணிவெடி அகற்றும் ஆரம்பப் பாடநெறி கடந்த வருடம் (2021) டிசம்பர் மாத இறுதியில் பூஓயாவில் உள்ள பொறியியலாளர் படையணித் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாவது பாடநெறி இந்த ஆண்டு (2022) ஜூன் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் மைலடியில் உள்ள 10 களப் பொறியியலாளர்கள் தலைமையகத்தில் ஆரம்பமானது, என தெவிக்கப்படுகிறது.
இந்த இராணுவ பெண் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் உள்நாட்டில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் பெறப்படும் அனுபவத்தின் மூலம் ஐநா அமைதிகாக்கும் படையின் கீழ் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான வாய்ப்பைப் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ பொது பணியாளர் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் எஸ். யு. எம். என். மானகே மற்றும் தளபதி, பாதுகாப்புப் படைகள் - யாழ்ப்பாணம் மற்றும் இராணுவ பொறியியலாளர் படையணியின் கேணல் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஜி.சி.எஸ்.பி விஜயசுந்தர அவர்களும் இராணுவத் தளபதியைத் தொடர்ந்து சான்றிதழ்களை வழங்கினர்.