மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள இலங்கை விமானப்படை பிரிவு உறுப்பினர்களுக்கு ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

செப்டம்பர் 28, 2022

மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 7வது விமானப் படையணிக்கான ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கான பதக்கம் வழங்கும் அணிவகுப்பு அண்மையில் (செப். 21) நடைபெற்றது.

விமானப்படை ஊடகத் தகவளின்படி, மத்திய ஆபிரிக்க குடியரசின் ஐ.நா அமைதி காக்கும் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மொஹமட் ஷஹீத் ரஹ்மான் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக இலங்கை விமானப்படையின் பிரதானி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

ஐ.நா அமைதி காக்கும் (MINUSCA) நடவடிக்கைகளில் கணிசமான பங்கை ஆற்றுவதில் இலங்கைக் குழு தனது தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுக்காக பிரதம அதிதியின் பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வின், பிரதம அதிதியும் கௌரவ அதிதியும் அணிவகுப்புத் தளபதி விங் கமாண்டர் பிரியங்க ஹேரத் அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன், விங் கமாண்டர் ஜானக தொடங்கொட அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் ஐ.நா அமைதி காக்கும் (MINUSCA) நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்ட 7வது இலங்கை விமானப்படைக் குழுவில் 20 அதிகாரிகள் மற்றும் 90 விமானப்படை வீரர்களும் உள்ளனர்.

2942 பயணிகள் மற்றும் 265,257 கிலோ கிராம் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதுடன் பாதுகாப்பு செயல்பாடுகள், பிறமுகர்கள் போக்குவரத்து, மருத்துவ வழங்கள் நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்களின் போது 1098 மணிநேரம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வில், ஐ.நா அமைதி காக்கும் (MINUSCA) நடவடிக்கைகளின் தலைமை விமானப் போக்குவரத்து அதிகாரி திரு சார்லஸ் ரோஜர் அமுஸ்ஸோ, கிழக்குப் பிரிவின் துணைத் தளபதி கர்னல் அஹமட் கோமா மொஹமட், ஐ.நா அமைதி காக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவ மற்றும் ஐ.நா வின் சிவிலியன் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.