சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்கின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஒக்டோபர் 17, 2022

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நேற்று (ஒக்டோபர் 16) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, சீரற்ற காலநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த அனர்த்த நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
12 மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 11,149 குடும்பங்களும் 49,873 நபர்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
அந்தந்த மாவட்ட செயலகங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.