12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஒக்டோபர் 20, 2022- முப்படைகளின் மிகப்பெரிய விளையாட்டு விழாவை பாதுகாப்பு செயலாளர் திறந்து வைத்தார்
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2022/2023 நேற்று (அக்டோபர் 19) பனாகொடை இராணுவ கன்டோன்மென்ட்டின் உள்ளக விளையாடரங்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்களின் வருகையுடன் இவ்வைபவம் நேற்று மாலை ஆரம்பமானது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கனைகள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டி இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் இம்முறை நடத்தப்படுகிறது.
நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர் நீத்த யுத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து போட்டி அலுவலர்கள் மற்றும் போட்டியாளர்கள் இவ்வருட போட்டிகளின் சின்னத்துடன் விளையாட்டரங்கிற்குள் அணிவகுத்து வந்தனர். ஆரம்ப விழாவின் நிகழ்வுகள் இராணுவ மரபுக்களுக்கமைய நடத்தப்பட்டன.
ஏற்பாட்டுக் குழு தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன வரவேற்புரையாற்றினார்.
அதன்பின் பிரதம அதிதி ஜெனரல் குணரட்னவினால் இவ்வருடத்தின் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் அனைத்து போட்டியாளர்களும் விளையாட்டுப் போட்டிகளின் உத்தியோகப்பூர்வ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் உட்பட மூன்று விளையாட்டு வீரர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையின் 600 விளையாட்டு வீர வீராங்கனைகளின் பங்கேற்புடன் 39 பிரிவுகளில் இம்முறை போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.